திருக்குறுங்குடி திருத்தேர் விழா…

திருக்குறுங்குடி திருத்தேர் விழா

திருக்குறுங்குடி , திருநெல்வேலியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் நாங்குனேரிக்கு அருகில் அமைந்துள்ளது. திருநெல்வேலி, நாகர்கோவில், வள்ளியூர், நாங்குனேரியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

இத்தலத்து இறைவனே நம்மாழ்வாராக பிறந்ததாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. திருவாலித் திருநகரில் பிறந்து தலங்கள் பல சென்று பரந்தாமனைப் பாடிப் பரவிய திருமங்கை மன்னன் இங்கு வந்து தான் திருநாட்டிற்கு எழுந்தருளியிருக்கிறார் (முக்தியடைந்தார்).

ஸ்ரீபாஷ்யகாரராம் ராமானுஜர், இத்தலத்திற்கு வந்தபோது இத்தலத்துறை நம்பி ஒரு சிஷ்யன் போல் வந்து அவரிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டு உபதேசம் பெற்றார் என்பது வரலாறு. அவருக்கு ராமானுஜர் இட்டபெயரே வைஷ்ணவநம்பி என்பதாகும்.

ராமானுஜர் திருவனந்தபுரம் சென்று அங்கே வைஷ்ணவ சம்பிரதாயங்களை நிலை நிறுத்த முயற்சித்த போது அச்செயலை அங்குள்ள நம்பூதிரிகள் தடுத்து நிறுத்த, இறைவனை வேண்டியதால் நம்பூதிரிகளிடமிருந்து ராமானுஜரை மீட்டு இத்தலத்திற்கு கருடாழ்வார் தூக்கி வந்ததாகவும் நம்பப்படுகிறது.

இத்தலத்திற்கு மன்னன் ஒருவன் தரிசனம் செய்ய வந்த போது “கருடன் பறக்கும் இடத்திற்கு கீழே பூமியை தோண்டினால், ஸ்ரீ தெய்வ நாயகன் மற்றும் ஸ்ரீ வரமங்கை ஆகியோரின் புதைந்துள்ள சிலைகள் கிடைக்கும்” என்ற அசரீரி கேட்டான், அசரீரியின்படி அந்த இடத்தை தோண்ட மேற்படி தெய்வ ரூபங்களை கிடைக்கப் பெற்றான். அவற்றை நாங்குனேரி வானமாமலை திருக்கோயிலில் அம்மன்னன் பிரதிஷ்டை செய்ததாக செய்தி உலவுகிறது.

பெரிய பெரிய சிவாலயங்களில் விஷ்ணு இடம் பிடித்திருப்பதைப் போல, இத் திருக்கோயிலில் சிவனுக்கென்று தனிச் சந்நதி உள்ளது. இங்கே எழுந்தருளியிருக்கும் சிவபிரானுக்கு ‘மகேந்திரகிரி நாதர்’ என்றும் ‘பக்கம் நின்ற பிரான்’ என்றும் பெயர். இத்தனைச் சிறப்பு பெற்ற திருக்குறுங் குடியில் பங்குனி பிரம்மோற்சவம் மிகப்பெரிய உற்சவம். அதில் இன்றைய தினம் திருத்தேர்விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

Editor

Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *