குபேரன் வழிபட்டு செல்வம் பெற்ற ஆலயம்
தூத்துக்குடி மாவட்டம் திருக்கோளூரில் மகாவிஷ்ணு ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாளாக அருள்கிறார். இந்த திருத்தலத்தில் வைத்தமாநிதி பெருமாளை வழிபட்டு, குபேரன் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றான். குபேரனுக்கு வைத்தமாநிதி பெருமாள் படி அளந்த நாள் மாசி மாதம் வளர்பிறை துவாதசி ஆகும். அதாவது நாளை புதன்கிழமை, பிப்ரவரி 21ஆம் தேதி ஆகும். இந்நாளில் ஸ்ரீவைத்தமாநிதி பெருமாள் மற்றும் குபேரனை வழிபட்டால் இல்லத்தில் செல்வம் பெருகும், தொழில் விருத்தி ஆகும், கடன் தொல்லை யாவும் நீங்கும், கல்வி செல்வம் பெருகும், வாழ்வில் இழந்த நிம்மதியையும் / இழந்த செல்வங்கள் யாவும் மீண்டும் நமக்கு வந்து சேரும், லாபம் பெருகும், நினைத்த காரியங்கள் ஜெயமாகும், செல்வ வளம் கொழிக்கும் என்பது ஐதீகம். மேலும், எல்லா நாளிலும் இறைவனை வழிபட்டால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
ஆலய சிறப்புகள்..
திருக்கோளூர் அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில் நவதிருப்பதிகளில் எட்டாவது திருப்பதியாகவும் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்தியேழாவது திவ்ய தேசமாகவும் நவக்கிரகங்களில் செவ்வாய் ஸ்தலமாகவும் இத்திருத்தலம் அமைந்துள்ளது. மதுரகவி ஆழ்வார் அவதரித்த திருத்தலமாகும். நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமாகும். இத்திருத்தலத்திற்கு வந்து வைத்தமாநிதி பெருமாள் வழிடுபட்டால், செல்வம் பெருகும், இழந்த செல்வங்களை மீண்டும் பெறலாம். ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டுள்ள பெருமாள் மரக்காலை (நெல் அளக்க பயன்படும் மரத்தாலான பாத்திரம்) தலைக்கு வைத்து படுத்திருப்பது ஆதனூருக்கு அடுத்து இத்திருத்தலத்தில் மட்டுமே ஆகும்.
திருக்கோளூர் ஆலயம் செல்லும் வழி…
திருநெல்வேலி – திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஆழ்வார் திருநகரியிலிருந்து மூன்று கிலோமீட்டார் தொலைவில் அமைந்துள்ளது. திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, ஏரல் மற்றும் நாசரேத்திலிருந்து போக்குவரத்து வசதி உள்ளது. நாசரேத் ரயில் நிலையத்தில் இறங்கி வரலாம்.
இறைவன் : அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள்
இறைவியர் : அருள்மிகு குமுதவல்லி
அருள்மிகு: கோளூர்வல்லி
தீர்த்தம் : குபேர தீர்த்தம்
தலவிருட்சம் : புளிய மரம்
ஆகமம் : வைகாநச ஆகமம்
விமானம் ஸ்ரீகர விமானம்