பங்குனி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமியை திரியம்பகாஷ்டமி என்று கூறுவர். இந்த தினத்தில் அன்னதானம் செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்.
அஷ்டமி திதிகளில் சுப காரியங்கள் (திருமணம், கிரகப்பிரவேசம், சொத்து வாங்குதல் உள்ளிட்டவை) மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால், இந்த திதிகள் தெய்வீக காரியங்களுக்கு (தீட்சை பெறுவது, மந்திரங்கள் ஜெபிப்பது, ஹோமங்கள் உள்ளிட்டவை) உகந்தவை.
தேய்பிறை அஷ்டமி திதியில் மகாதேவர் என்கிற சிவபெருமான் பைரவர் அவதாரம் எடுத்து பூமிக்கு வந்தார். இவரை வணங்கி தனக்கு அருளும், ஆசியும் வேண்டும் என்று ஆயுளையும், அழிவில்லா பொருளையும், ஆன்ம சாந்தியையும் தரும் சனிதேவர் பணிந்தார்.
ஸ்ரீபைரவருக்கு பௌர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்.
இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும், தொழிலில் வளர்ச்சி காணவும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும், செல்வ செழிப்போடு வாழவும் தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு செய்ய வேண்டும்.
தேய்பிறை அஷ்டமியில் பைரவரை ஏன் வணங்க வேண்டும்?
தேய்பிறை அஷ்டமியில் பைரவரை ஏன் வணங்க வேண்டும் என்றால், அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமி அன்றுதான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு செல்வங்களை வழங்கி வருகின்றனர் என்பது ஆன்றோர்கள் மற்றும் சித்தர்களின் நம்பிக்கை.
நாமும் அதுபோல் தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட, அஷ்ட லட்சுமிகளின் ஆசியும், பைரவரின் வரங்களும் ஒருங்கிணைந்து கிடைத்துவிடும்.
தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். மேலும், நமது ஏழு ஜென்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களின் பாவ வினைகள் தீரத் துவங்கும். அப்படி பாவ வினைகள் தீரத் துவங்கிய மறு நொடியே நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும்.
பலன்கள் :
- வர வேண்டிய பணம் வந்துவிடும்.
- தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை உருவாகிவிடும், எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.
- வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் தீரும். வலியும், வேதனையும் பெருமளவு குறையும்.
- சனியின் தாக்கம் தீரும்.
- வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்துக்கொண்டே செல்லும்.
- பணம் சார்ந்த பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.