ஓம் என்று சொன்ன பிறகு, விஷ்ணுவே, சிவனே, சக்தியே, விநாயகா, ஐயப்பா, முருகா என்றெல்லாம் அவரவர் இஷ்டதெய்வத்தை அழைக்கிறோம்.
ஓம் என்றொலிக்கும் அக்ஷரப்பிரும்மம்
தைத்திரியோபநிடதத்தில் பின்வருமாறு காணப்படுகிறது:
நசிகேதஸ்ஸுக்கு ஆத்மஸ்வரூபத்தை உபதேசிக்கும் யமதர்மன் பின்வருமாறு கூறுக்கிறார்:
எந்தப் பதத்தை அடையவேண்டிய பதமென்று அனைத்து வேதங்களும் கூறுகின்றனவோ, எதன் பொருட்டுப் பிரம்மச்சரியம் அனுட்டிக்கப் படுகின்றதோ அதனைச் சுருங்கச் சொல்லின் அதுவே ஓம் என்றாகின்றது. இந்த ஓம் என்ற நாதம் அக்ஷரப்பிரம்மாக உபாசிக்கப்பட வேண்டியதொன்று. பராபரப்பிரம்மஸ்வரூபமாக உபாசிக்கப்படும் பிரணவம் சப்தப்ரூபமாக இருந்து பராபரப் பிரும்மத்தையடையச் சாதனமாகிறது. எனவே ஓம் எனும் நாதம் பிரம்மமாகவே மனதிற் தியானிக்கப் படவேண்டும். வேதாரம்பத்தில் ஓம் என்று ஆரம்பித்தே வேதஞானம் எய்தப்படுகிறது. பிரும்மத்தை முன்னெடுத்துச் செய்யப்படுபவை அனைத்தும் சித்தி பெறும் என்பதனால் ஓங்காரத்தைப் பிரம்மம் என்று உபாசிப்பதே முறை.
ஓம் என்றொலிக்கும் ஒரு தொனியே போதும்
சங்கரரின் “ஆத்ம போதம்” நூலுக்கான’ தமது விளக்கத்தில் பார்த்தசாரதி சுவாமிகள் கீழ்வருமாறு கூறுகிறார்:
சைவத்தத்துவங்கள் அறுதியிட்டுக் கூறும் அந்த அடிப்படை உண்மையைச் சரியாகத் தெரிந்து கொள்ளவெனில் ஒருவனுக்கு அவனுடைய மாணவப்பராயம் மட்டுமே போதாது. ஏன், ஒரு பிறவிக்காலம் கூட முழுமையாகப் போதாது. இருப்பினுங் கூட இந்தச்செய்தியை உலகினருக்கு எடுத்தியம்ப ஒரு வார்த்தை கூடத் தேவைப்படாது. ஒரே ஒரு தொனி மட்டுமே போதுமானது. இத்துணைப் பெருமை சேர்ந்த அந்தத் தொனியைத்தான் ஓம் என்றொலிக்கும் ஓங்காரமென்கிறோம்.
வடிவம் பெறாத வரையறை பெறாத விவரிக்கமுடியாத, புலனறிவுகட்கு அப்பாலாய் உய்த்துணர்தலுக்கும் அறிந்தொழுகலுக்கும் அப்பாலாய் நின்ற அதீத உண்மையாகிய அந்தப் பரம்பொருளை ஆத்ம சிந்தனைக்குட் புகட்டித் தரவென்று சைவநெறி இரு வேறு உத்திகளைக் கையாள்கிறது.
முதலாவது உத்தி தான் கிரியாமுறைகளின் பாற்பட்ட விக்கிரக வழிபாடு. அலைந்து திரியும் மனத்தை அடக்கிச் சிந்தனையை ஆண்டவன் பாற் செலுத்தப் புறக்கண் முன் நிலை கொள்ளும் பரப்பிரும்மத்தின் சின்னமொன்றே இங்கு விக்கிரகமெனவாகி எமக்குத் துணைபுரிகின்றது.
இரண்டாவது உத்தி தான் தியான மார்க்கத்தின் பாற்பட்ட அகவழிபாட்டு முறையாகும். இவ்வகையில் அகவழிபாட்டிற் சிந்தனையை ஒருப்படுத்த உதவும் சின்னம் (விக்கிரகம்) தான் ஓம் என்றொலிக்கும் ஓங்காரம் ஆகும்
புறவழிபாட்டின் போது கண்கள் திறந்திருப்பதன் காரணமாக ஐம்புலன்களின் தொழிற்பாடுகளும் அதிகரித்து விட மனத்தை ஒருநிலைப்படுத்துவதென்பது சற்றே கடினமாகி விடுகிறது. அகவழிபாட்டின் போது காது ஒன்றே தொழிற்படு கருவியாக இருக்கின்றது. காது என்ற ஒரு கருவிக்கெனில் ஐம்புலங்களையும் அலையத் தூண்டும் வல்லமை குறைவு. அமைதி கவிந்த நிலையில் அதிர்ந்தொலிக்கும் ஓங்காரம் காதைக் கூட முழுமையாகத் தன்னாட்சிக்குட்படுத்தும் வல்லமை கொண்டதென்பதனால் புலனடக்கம் என்பது எய்தப்படக்கூடிய தொன்றாகி விடுகிறது. இந்த வாதங்களின் அடிப்படையில் எமது நம்பிக்கைகளையும் முறைகளையும் சீராய்வு செய்வோமானால் விக்கிரக வழிபாட்டை விடவும் சிறந்த சாதனமொன்று எம்மிடம் இருக்கத்தான் செய்கிறது. அது தான் ஓம் என்றொலிக்கும் ஓங்காரம்.
ஓம் என்ற ஒலி முழுமையான் உண்மைப்பொருளைக் குறிக்கின்றது. அந்த ஒலி அடித்தொண்டையில் உருவாகி வாயினில் வளம் பெற்று உதடுகளிற் தெறிக்கிறது. ஒலிப்பின் முன்னரும் பின்னரும் பேரமைதி பேணப்படுகிறது. இவ்விதம் ஒலிக்கப்படும் போது பேணப்படும் அமைதியானது கட்புலனுக்கெட்டாது பரந்து விரிந்து நிற்கும் பேருணர்வான பரப்பிரும்மத்தையும் ஒலிக்கும் ஓசை அகண்டு விரிந்து நிற்கும் பேரண்டத்தையும் சுட்டுகின்றன.
அமைதியில் உருவாகி ஓசையில் வாழ்வு கண்டு அமைதியில் ஒடுங்கும் ஓங்காரமும் அமைதியில் உருவாகி ஓசையில் வாழ்வுகண்டு அமைதியில் ஒடுங்கும் பேரண்டமும் அமைதியான பரம்பொருளில் எம் மனத்தை லயிக்க வைக்கும் வகை காண்கின்றன.
ஓம் என்னும் மந்திரத்திற்குள் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மாவும், காக்கும் கடவுளான விஷ்ணுவும், சம்ஹார மூர்த்தியாகிய ருத்திரனும் அடக்கம்.
ஓம் என்னும் மந்திரம் ஜபிப்பதன் மூலம் உடலையும் உள்ளத்தையும் சீராக வைத்துக்கொள்ள முடியும்.
எடுத்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும். எதிர்ப்பு சக்திகள் நீங்கும். மன சாந்தி ஏற்படும்.
உலகத்தோடு ஒட்டி வாழலாம், வயது முதிர்ந்தோர் இந்த ஏகாட்சரத்தால் ஏகாந்த நிலையை அடையலாம்.
வாய்விட்டு ஜபிக்காமல் மனதிற்குள் “ஓம்”, “ஓம்”, “ஓம்” என ஜபிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓ. . . ம் என நீட்டியும் மனதால் ஜபிக்கலாம்.