12 ராசிகளுக்கும் அதிர்ஷ்ட யோகம் தரும் திதி நாள்கள்!

திதிகள்

மேஷம் முதல் மீனம் வரை உங்கள் ராசிக்கு அதிர்ஷ்ட யோகம் தரும் திதி நாள்கள்!

ஜோதிடத்தின் அடிப்படை பஞ்சாங்கம். தினமும் பஞ்சாங்கம் பார்ப்பது அவசியம். அதனால், எல்லாவிதமான நற்குணங்களும் உண்டாகும். விரோதிகள் வலுவிழப்பார்கள். கெட்ட கனவுகளால் ஏற்படும் தோஷங்கள் விலகும். கங்கையில் நீராடிய புண்ணியமும், கோதானம் செய்த பலனும் கிடைக்கும்.

அதுமட்டுமா? தர்மசாஸ்திரப்படி தினந்தோறும் காலையில் பஞ்சாங்கத்தை எடுத்துப் பார்த்து, அன்றைய திதியைச் சொல்வதால் செல்வம் கிடைக்கும். வாரத்தை (கிழமை) சொல்வதால் ஆயுள் விருத்தியாகும். நட்சத்திரத்தைச் சொல்வதால் பாபம் விலகும். யோகத்தைச் சொல்வதால் நோய் நீங்கும். கரணத்தைச் சொல்வதால் காரியம் நிறைவேறும்.

இந்த ஐந்து அங்கங்களில் திதிகள் குறிப்பிடத் தக்கவை. திதி- சந்திரனின் நாளாகும். மொத்தம் முப்பது திதிகள் உண்டு. அமா வாசையை அடுத்து சதுர்த்தசி வரையிலான 15 திதிகள் வளர் பிறை (சுக்லபட்சம்) காலமாகும். பௌர்ணமியை அடுத்து சதுர்த்தசி வரையிலான 15 திதிகள் தேய்பிறை (கிருஷ்ண பட்சம்)

மேஷம்: இவர்களுக்கு சஷ்டி திதி அனுகூலம் தரும். இவர்கள், அமாவாசை மற்றும் பிரதமை திதிகளைத் தவிர்க்கவேண்டும். பொதுவாகவே இந்த இரண்டு திதிகளையும் எவரும் சுபகாரியங் களுக்குப் பயன்படுத்துவது இல்லை.

ரிஷபம்: சுக்ல பட்ச சதுர்த்தசி அதிர்ஷ்டம் தரும். இந்தத் திதியில் இவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். தசமி திதியைத் தவிர்க்கலாம்.

மிதுனம்: பஞ்சமியும் சப்தமியும் அனுகூலம் செய்யும். தொழில் தொடங்குவது, புதுச் சொத்து கள் வாங்குவது, சுப காரியங்களுக்கு ஆரம்பப் பணிகளைச் செய்வது என இந்த நாளில் செயல் பட்டால், நற்பலன்கள் கிடைக்கும். அஷ்டமி, நவமியைத் தவிர்க்கலாம்.

கடகம்: முன்னேற்றத்துக்கு அச்சாரமான முயற்சிகளை கடக ராசியினர் சதுர்த்தி திதிநாளில் தொடங்கினால் வெற்றி நிச்சயம். இவர்கள், துவாதசி திதியைத் தவிர்க்கலாம்.

சிம்மம்: ராஜ ஆளுமை மிக்க இந்த ராசியினர், குடும்பம், தொழில், உத்தியோகம் சார்ந்து எவ்வித புதிய முயற்சிகளாக இருந்தாலும், சப்தமி திதிநாளில் தொடங்கினால், பன்மடங்காக பலன் கிடைக்கும். இவர்கள் திரயோதசி, சதுர்த்தசி திதி நாள்களைத் தவிர்க்கலாம்.

கன்னி: இவர்களுக்கு திருதியை அனுகூல பலன்களையும் அதிர்ஷ்ட யோகங்களையும் தரும். சஷ்டி மற்றும் சதுர்த்தசி திதிநாள்களில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவேண்டும்.

துலாம்: பயணம் முதல் பிசினஸ் வரையிலும் இவர்கள் பஞ்சமியைத் தேர்ந்தெடுத்து காரியம் ஆற்றினால், நன்மைகள் வந்து சேரும். அஷ்டமி, நவமியைத் தவிர்க்க வேண்டும்.

விருச்சிகம்: தசமியும் ஏகாதசியும் அதிர்ஷ்டம் தரும். செய்தொழிலில் புதிய நடவடிக்கைகள், குடும்ப காரியங்கள் முதலானவற்றுக்கு இந்த இரண்டு திதிகளும் சிறப்பு சேர்க்கும். சதுர்த்தி, சஷ்டியை இவர்கள் தவிர்ப்பது நலம்.

தனுசு: இவர்களுக்கு அனுகூலமான திதிகள் திருதியை மற்றும் சதுர்த்தி. துவாதசி மற்றும் திரயோதசி திதிநாள்களை தவிர்க்கவும்.

மகரம்: இந்த ராசிக்காரர்களுக்கு சப்தமியும் பஞ்சமியும் நன்மை அளிக்கும். இந்த நாள்களில் சுபகாரியங்களுக்கு அச்சாரம் இடலாம். நவமி மற்றும் தசமியைத் தவிர்க்கலாம்.

கும்பம்: திருதியையும் சதுர்த்தியும் சிறப்பான பலன்களைத் தரும். அஷ்டமி, நவமியை வழக்கம்போன்று தவிர்த்து விடலாம்.

மீனம்: இந்த ராசி அன்பர்கள் பஞ்சமி மற்றும் சஷ்டி திதி நாள்களில் தொடங்கும் காரியங்கள் அனுகூல பலன்களை அள்ளி வழங்கும். பிரதமை மற்றும் ஏகாதசி திதிநாள்களை இவர்கள் தவிர்த்துவிடலாம்.

இவை, ராசி அடிப்படையிலான பொதுவான விளக்கங்கள்.

Editor

Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *