சாஸ்திர சம்பிரதாயங்களின்படி இந்தத் திதிகளுக்குச் சிறப்பு அல்லது குறைபாடுகள் உண்டு. பொதுவாக, அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை திதிகளில் சில திருமணம், கிரஹப்பிரவேசம், சீமந்தம், புதுத்தொழில் ஆரம்பம் ஆகியவற்றுக்கு மிகவும் உகந்தது என்பது சாஸ்திரக் கோட்பாடு.
ஆனால், அமாவாசைக்குப் பிறகு வரும் திதிகளில் பஞ்சமி அல்லது சஷ்டிக்கு பிறகே வளர்பிறையின் பலன் வரும் என்பது ஜோதிட சாஸ்திர நடைமுறை விதி. அதாவது, அமாவாசை கழித்து வானில் சந்திரன் நன்றாகத் தெரியும் நாளான பஞ்சமி முதலே வளர்பிறையின் அனுகூலங்கள் உண்டாகும் என்பது தத்துவம்.
அதுபோலவே, தேய்பிறையில் பௌர்ணமியில் இருந்து பஞ்சமி வரை வளர்பிறையாகவே எடுத்துக்கொள்வது ஜோதிட விதி. வானில் சந்திரனின் பிம்பம் நன்கு தெரிவதால் இந்தப் பலன் சொல்லப்படுகிறது.
வளர்பிறை காலத்தில் குறிப்பிட்ட திதியின் அதிதேவதையை வணங்கிவிட்டு சுப காரியங்களைச் செய்வது விசேஷம். தேய் பிறை காலத்தில் சுபகாரியங்கள் செய்யும் அவசியம் ஏற்பட்டால், பஞ்சமிக்குள் செய்வது உத்தமமாகும். தேய்பிறை பஞ்சமி வரையிலும் வளர்பிறை காலம் போல் பலன் உண்டு என்று பெரியோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். இனி, ஒவ்வொரு திதி நாளின் முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்துகொள்வோம்.
அமாவாசையில் சுபகாரியங்கள் செய்யலாமா?
‘அமாவாசை என்பது நிறைந்த நாள்; எல்லா புதுக் காரியங்களையும் தொடங்க அது நல்ல நாள்தான்’ என்ற நம்பிக்கை ஒன்று உண்டு. இது சாஸ்திரப்படி சரியாகாது. அமாவாசையில் வானில் சந்திரன் முற்றிலும் தென்படாது. அதை வளர்பிறையிலோ, தேய்பிறையிலோ கணக்கிட முடியாது. அது, மூதாதையர்களை நினைவுகூர்ந்து தர்ப்பணம் முதலிய பித்ரு காரியங்கள் செய்யத்தான் உகந்தது.
பிரதமை ஏமாற்றம் தருமா?: அமாவாசைக்கு மறு நாளான பிரதமையை ‘பாட்டிமை’ என்று குறிப்பிடுவார்கள். அன்று புதிய காரியங்கள், சுபகாரியங்கள் செய்தால் தடைகளும் தாமதமும், எதிர்ப்பும் ஏமாற்றமும் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, அந்த நாளைத் தவிர்க்கலாம். ஆனால், பௌர்ணமிக்கு மறு நாளான பிரதமைக்கு இந்தத் தோஷம் கிடையாது என்பார்கள். பிரதமை நாள்களில் வாஸ்து மற்றும் அக்னி தொடர்பான காரியங்கள், மதச் சடங்குகளைச் செய்யலாம் என்ற கருத்தும் உண்டு. இந்த திதிக்கு அதிதேவதை அக்னி.
துவிதியை: இந்த திதிக்கு அதிதேவதை பிரம்மன். இந்தத் திதி நாள்களில் அரசுக் காரியங்கள் ஆரம்பிக்கலாம். திருமணம் செய்யலாம். ஆடை, அணிமணிகள் அணியலாம். விரதம் இருக்கலாம். தேவதை பிரதிஷ்டை செய்யலாம். கட்டட அடிக்கல் நாட்டலாம்.
திருதியை: இதன் அதிதேவதை கெளரிதேவி. வளர்ச்சியைத் தரும் திதி நாள். சகல சுபகாரியங்களுக்கும் ஏற்றது. குறிப்பாக குழந்தைக்கு முதன்முதல் அன்னம் ஊட்டுவது, சங்கீதம் கற்கத் தொடங்குவது, சீமந்தம் ஆகிய வைபவங்களைச் செய்யலாம்.
சதுர்த்தி: மஹா கணபதி அவதரித்த திதியானபடியால் சிறப்பு மிக்கது. இந்தத் திதி நாளில் (சங்கட ஹர சதுர்த்தி) விநாயகரை வழிபடுவதன் மூலம் கேது தோஷம் விலகும். முற்கால மன்னர்கள் படையெடுப்புக்கு உகந்த நாளாக இதைத் தேர்ந்தெடுப்பார்கள். எதிரிகளை வெல்ல, விஷ சாஸ்திரம், அக்னிப் பயன்பாடு செய்ய உகந்த திதி இது. எமதருமனும் விநாயகரும் இந்தத் திதிக்கு அதிதேவதை ஆவார்கள்.
பஞ்சமி: நாக தேவதைகளை அதிதேவதையாகக் கொண்ட திதி நாள். எல்லா சுப காரியங்களையும் செய்யலாம். குறிப்பாக சீமந்தம் செய்ய உகந்த திதியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மருந்து உட்கொள்வது, ஆபரேஷன் ஆகியவற்றுக்கு உகந்தது. நாக தோஷம் உள்ளவர்கள் இந்தத் திதியில் நாக பிரதிஷ்டை செய்து வேண்டி வழிபட, நாக தோஷம் விலகும்.
சஷ்டி: கார்த்திகேயன் இதற்கான அதிதேவதை. இந்த தினங்களில் முருகப்பெருமானை வழிபடுவதால் விசேஷ பலன்கள் உண்டாகும். இந்தத் திதியில் சிற்ப, வாஸ்து காரியங்களில் ஈடுபடலாம். ஆபரணம் தயாரிக்கலாம். வாகனம் வாங்கலாம். புதிய பதவிகளை ஏற்கலாம்.
சப்தமி: இதன் அதிதேவதை சூரியன். பயணம் மேற்கொள்வது, வாகனம் வாங்குவது, வீடு, தொழிலில் இடமாற்றம் செய்வது, சங்கீத வாத்தியங்கள் வாங்குவது, திருமணம் ஆகியவற்றுக்கு உகந்தது.
அஷ்டமி: இதற்கு ருத்ரன் அதிதேவதை. இந்தத் திதிநாளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். தளவாடம் வாங்கலாம். நடனம் பயிலலாம்.
நவமி: சத்ரு பயம் நீக்கும் திதி இது. கெட்ட விஷயங்களை அழிப்பதற்கான செயல்களை இந்நாளில் தொடங்கலாம். இந்த திதிக்கு அம்பிகையே அதிதேவதை ஆவாள்.
தசமி: இதன் அதிதேவதை யமன். சகல சுபகாரியங்களிலும் ஈடுபடலாம். குறிப்பாக ஆன்மிகப் பணிகள், மதச் சடங்குகள், பயணம், கிரகப்பிரவேசம், வாகனம் வாங்குவது, அரசாங் கக் காரியங்கள் ஆகியவற்றுக்கு உகந்த திதி நாள் இது.
ஏகாதசி: இந்தத் திதிநாளில் விரதம் இருக்கலாம். திருமணம் செய்யலாம். புண்ணுக்கு சிகிச்சை செய்து கொள்ளலாம். சிற்ப காரியம், தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். இதற்கு, ருத்ரன் அதிதேவதை ஆவார்.
துவாதசி: மதச்சடங்குகளில் ஈடுபடலாம். அதி தேவதை விஷ்ணு.
திரயோதசி: இந்த நாளில் சிவ வழிபாடு செய்வது விசேஷம். மேலும் பயணம் மேற்கொள்ளலாம். புத்தாடை அணியலாம்.
சதுர்த்தசி: ஆயுதங்கள் உருவாக்கவும், மந்திரம் பயில்வதற்கும் உகந்த நாள் இது. காளி இந்த திதிக்கு அதிதேவதை.
பௌர்ணமி: ஹோம, சிற்ப, மங்கள காரியங்களில் ஈடுபடலாம். விரதம் மேற்கொள்ளலாம். இந்த நாளுக்கு பராசக்தி அதிதேவதை ஆவாள்