திருவாரூர்: மனிதர்கள், முனிவர்கள், தேவர்கள் பூஜிக்கும் திருத்தலம்

Thiruvarur Thiyagarajar Kamalambigai

திருவாரூர் தியாகராஜர் கோயில், மிகவும் புகழ்பெற்ற பழமையானதும், பிரம்மாண்டமானதும் ஆன பெரிய கோயில் ஆகும். இக்கோயில் நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87ஆவது சிவத்தலமாகும்.
திருவாரூர் ஸ்ரீ வன்மீகநாதர் (தியாகராஜர்) மற்றும் ஸ்ரீ கமலாம்பிகை திருக்கோவில் மிகவும் தொன்மையும் சிறப்பும் மிக்கது.
தீர்த்தம் கமலாலயம், சங்கு, கயா, வாணி தீர்த்தம், இத்தலத்திற்க்கு வந்து வணங்காத தேவர்களும் இல்லை சிவநெறி செல்வர்களும் இல்லை, அவர்களில் சிலர் : நம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், பூந்துருத்தி நம்பி காடநம்பி, திருவாலியமுதனார் , சேந்தனார்,சேரமான்பெருமாள் நாயனார், கபிலதேவநாயனார், பரணதேவநாயனார், நம்பியாண்டார் நம்பி, கழற்சிங்க நாயனார், செருத்துணை நாயனார், சேக்கிழார், திருமால், திருமகள், இராமர், மன்மதன், இந்திரன், முசுகுந்த சக்கரவர்த்தி, என்று சொல்லிட தீராத தேவர்களும் தெய்வங்களும் வந்து இங்கே நம் இறைவனை வணங்கி சிறப்பு பெற்று செல்லும் அற்புத ஆலயம் இந்த திருவாரூர் ஆகும்.
திருப்பாற்கடலில் திருமால் இத்தல இறைவர் தியாகராசரை தமது மார்பில் வைத்து பூசித்தார், திருமாலின் மூச்சினால் அவர் மார்பின் ஏற்ற இறக்கங்களில் நம் இறைவர் நடமாடினார், பின் இந்த மூர்த்தியை இந்திரன் வரமாக பெற்று பூசித்தார், அதன்பின் முசுகுந்த சக்கரவர்த்திக்கு இந்திரனால் வழங்கப்பெற்றது. இத்துடன் மேலும் ஆறு மூர்த்தங்கள் நிறுவப்பட்ட தலங்களே சப்தவிடங்க தலங்கள் எனப்படுகிறது. திருவாரூர் சப்தவிடங்க ஸ்தலங்களில் தலைமை இடமாகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்றாகும்.

Thiruvarur
Thiruvarur திருவாரூர் ஆலயம்

பண்டைய தமிழ்நாட்டின் பகுதியாகிய சோழ மண்டலத்தின் ஒருபகுதியே திருவாரூர் வட்டமாகும். கரிகாலன் கி.பி. 50 முதல் 95 வரை ஆண்டதாக வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். கரிகாலனுக்கும் முற்பட்ட புராண காலச் சோழர்களான முகுந்தன், புறாவுக்காக தன் சதையை அறுத்துக் கொடுத்த சிபிச்சக்கரவர்த்தி, கன்றுக்காக மகனைக் கொன்ற மனுநீதிகண்ட சோழன் மூவரும் வாழ்ந்த இடமாக கூறப்படும் இடம் திருவாரூர் ஆகும். திருவாரூரையும் தியாகராசர் கோயிலையும் பிரித்து வரலாறே எழுத முடியாது. காவிரி ஆற்றின் வளமான வண்டல்பகுதியை உள்ளடக்கியது திருவாரூர் வட்டம். சோழ அரசர்கள் முடிசூட்டிக் கொள்ளும் ஐந்து ஊர்களுள் இதுவும் ஒன்று. (மற்ற ஊர்கள்: காவிரிப்பூம்பட்டினம், உறையூர், செய்ஞலுர், கருவூர்).

திருவாரூர் தியாகராஜர் கமலாம்பிகை
திருவாரூர் தியாகராஜர் கமலாம்பிகை

ஆறு சிவத்தலை விராட புருடனின் ஆறு ஆதாரங்கள் என்று போற்றுவது சைவமரபு. அம்முறையில் திருவாரூர் மூலாதாரத்தலம்.
ஐம்பூதத் தலங்களில் திருவாரூர் பிருதிவித்தலமாகும்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றாலும் சிறந்து விளங்குந்தலம் திருவாரூர்.
ஏழு விடங்கர் தலத்தில் மற்ற தலங்கள் சூழ நடுவில் உள்ளது திருவாரூர்.
முதலாம் ஆதித்தன் (கி.பி. 871-907) காலக் கல்வெட்டு முதல் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மராத்திய மன்னர் சரபோஜி காலம் வரையிலான கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. முற்கால சோழர்கள் ஆட்சியில் கட்டப்பட்டிருக்கலாம் என்ற கருத்தே வலிவு பெற்றிருக்கிறது.
திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடப்பெற்றது திருவாரூர். 330 தேவாரப்பாடல்களும், திருவாசகப் பாடல்களும் உள்ளன. இது தவிர திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம், பன்னிரு திருமுறைகளிலும் போற்றப்பட்டுள்ளது.
அருணகிரிநாதர், தெலுங்கிசை மும்மூர்த்திகள், கயிலை ஞானப்பிரகாசர், குருஞானசம்பந்தர், இரட்டைப்புலவர்கள், அந்தகக்கண் வீரராகவ முதலியார், மராட்டிய மன்னர் சகாஜி, வள்ளலார் முதலியோராலும், தமிழ், தெலுங்கு, மராட்டி, சம்ஸ்கிருத இலக்கியங்களிலும் இவ்வூரைப்பற்றி பாடப்பட்டுள்ளன.

 திருவாரூர் தியாகராஜர்
திருவாரூர் தியாகராஜர்

63 நாயன்மார்களில் இருபத்து மூவருக்குத் தொடர்புடைய தலமாகும். இவ்வாலயம் கோயில்களின் கூடாரம். 9 ராஜகோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மண்டபங்கள், 15 தீர்த்தக் கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 100-க்கும் மேற்பட்ட சன்னதிகள் ஆகியவற்றுடன் இத்திருக்கோயில் பிரம்மாண்டமாகப் பரந்து விரிந்து சிறப்பாக அமைந்துள்ளது.
அருட்திரு தியாகராஜசாமி கருவறை விமானத்துக்கு தங்கத்தகடு போர்த்திய முதலாம் இராஜேந்திரன் குடமுழுக்கும் செய்வித்ததாக இக்கோயிலின் கல்வெட்டு கூறுகிறது. இக்கோயிலின் ராஜகோபுரம் மூன்றாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டதென்று திருபுவனம் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
இரண்டாம் இராஜாதிராஜன் பெரிய கோபுரத்தையும் சபாபதி மண்டபத்தையும் கட்டினான். இரண்டாம் இராஜேந்திரன் வீதிவிடங்கர் எழுந்தருளியுள்ள கருப்பக் கிருகத்தையும், வன்மீகநாதர் கருவறையையும் பொன்வேய்ந்தான் என்பதும், திருமுறை ஆசிரியர்களின் திருநாட்களைக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்பதும், திருவிளக்குப் பணிக்காகவும் பூசை முதலியவற்றுக்காகவும் சோழ மன்னர் நிலம் அளித்தனர் என்பதும் இங்குள்ள கல்வெட்டுக்களால் தெரிய வருகிறது.
இக்கோயிலிலுள்ள ஆயிரங்கால் மண்டபம், கல்தூண்களை மட்டுமே உடையது. விழாக்களின்போது அவற்றின் மீது பந்தல் அமைத்துக் கொள்வர். இம்மண்டபத்தை சேக்கிழார் பாடியுள்ளார். கண்டீசர் இருக்குமிடத்தில் எமன் இருப்பதும் நின்ற நிலையில் நந்தி அமைந்திருப்பதும் இக்கோயிலின் பிற சிறப்புகளாகும். இக்கோயிலிலுள்ள தியாகராசருடைய ‘அசபா நடனம்’ இவ்வூர்த் திருவிழாக்களில் சிறப்பாக நடைபெறுகிறது. மனுநீதிச் சோழன் கதை, அழகிய கல் சித்திரமாகக் கீழைக் கோபுர வாயிலருகே காணப்படுகிறது. சுந்தரரின் மனைவியரான பரவையார் பிறந்த ஊர் இதுவே. பரவை நாச்சியாருக்கென தியாகராசர் கோயில் தெற்குக் கோபுரத்தின் தென்புறத்தில் தனி ஆலயம் உள்ளது. தண்டபாணிக் கோயில், இராஜதுர்கை கோயில், மாணிக்க நாச்சியார் கோயில், திருவாரூர்ப் பரவையுண் மண்டலி முதலியன இவ்வூரில் காணத்தக்கவை.
இக்கோயிலிலுள்ள தேவாசிரிய மண்டபத்தில்தான் சுந்தரருடைய திருத்தொண்டத் தொகையை இயற்றப்பட்டதாக கூறுவர்.
64 சக்தி பீடங்களில் திருவாரூர் முக்கியமான ஊர். இக்கோயிலில் ஞானசக்தியாகவும் (கமலாம்பிகை), கிரியா சக்தியாகவும் (நீலோத்பலாம்பாள்), இச்சாசக்தியாகவும் (கொண்டி) வடிவு கொண்டு அருள் புரிகிறாள்.

இக்கோயிலில் உள்ள சித்தீஸ்வரம், மேதா தட்சிணாமூர்த்தி சன்னதியில் தருமபுர ஆதீன நிறுவனர் உபதேசம் பெற்றதாக கருதப்படுகிறது. 17 ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மன்னன் சகாஜி திருவாரூர் தியாகராஜர் மீது தமிழில் பல நூறு கீர்த்தனைகள் பாடியுள்ளார். இவரும் இவருக்குப் பின்னர் முதல் சரபோஜியும் ஆண்டபோது திருவாரூரில் மன்னரின் பிரதிநிதியாக சாமந்தனார் ஒருவர் பணிபுரிந்தார். அவருடைய மந்திரியாய் பணிபுரிந்தவர் சிங்காதனம். இவர் சிறந்த ஓவியர். இவர் வரைந்த ஓவியங்களில் கோயிலின் மண்டபத்தில் இன்றும் உள்ளது. அதன் வாயிலாக 17 ஆம் நூற்றாண்டில் ஆரூர் திருக்கோயில் எப்படித் திகழ்ந்துள்ளது என்றும் ஆரூர் மக்களின் பண்பாடு, அவர்களின் இயல், இசை, கூத்துக்கள் பற்றி விளக்கமாக நாம் காண முடிகிறது.
‘திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லோர்க்கும் அடியேன்’ என்று சுந்தரர் தேவாரம் பாடுகிறது. இதைவிட இவ்வூர்ச் சிறப்பு பற்றி வேறு சொல்ல வேண்டுமா?

திருவாரூர்த் தேர்
‘திருவாரூர்த் தேரழகு’ என்றும் ‘திருவாரூர்த் தேரசைவது போல் அசைகிறான்’ என்ற பழமொழியும் நாட்டு மக்களிடம் திருவாரூர் தேர்ப்பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது என்பதை அறியலாம். ‘ஆழித்தேர் வித்தகனே நான் கண்டது ஆரூரே’ என்று திருநாவுக்கரசர் சொல்கிறார். அவர் காலம் 7 ஆம் நூற்றாண்டு. இதன்மூலம் 7 ஆம் நூற்றாண்டிற்கு முன்பே தேர்த்திருவிழா நடந்து வருவதை அறியலாம். மற்ற ஊர்களில் உள்ள தேர்கள் அரைத்தேர், முக்கால் தேர்தான். திருவாரூர் தேரே முழுத் தேராகும்.
திருவாரூர் தேரானது, ஆசியாவிலேயே மிகப் பெரிய தேராகும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுக்கின்றனர். அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியும், 300 டன் எடையும் ஆகும். இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர்.
தமிழகத் தேர்களில் திருவாரூர் தேரே பெரியதாகும். இதனால் இதனை ‘ஆழித்தேர்’ என்று அழைக்கின்றனர். ‘ஆழி’ என்பது சக்கரமாகும். மனுநீதிசோழன் தன் மகன் கன்றைக் கொன்றதால், மகனையே தன் தேர்க்காலில் இட்டுக் கொன்று நீதியைக் காத்ததால் இத்தேர் திருவிழா இங்கு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

திருவாரூர்த் தேர்
திருவாரூர்த் தேர்

1748-ல் தேர்த் திருவிழா நடைபெற்றதற்கான குறிப்பு தஞ்சை அரண்மனை சரஸ்வதி மகால் நூலக மேயடி ஆவணம் கூறுகிறது. 1765 ஆம் ஆண்டு தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர் இரண்டாம் துளஜா, திருவாரூர் தேர் விழாவுக்கு வருகை தந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
1926 ஆம் ஆண்டு தேரோட்டத்தின்போது ஏற்பட்ட தீ விபத்தில் திருவாரூர் தேர் முழுவதும் எரிந்தது. 2 நாட்கள் எரிந்ததாக கூறுவர். பின்னர் 1928 ஆம் ஆண்டு புதுத்தேர் உருவாக ஆரம்பித்து 1930 ஆம் ஆண்டு மார்ச் 3ந் தேதி மீண்டும் ஓடியது.  பின்னர் 1948 ஆம் ஆண்டோடு தேரோட்டம் நின்றுவிட்டது. 1970 ஆம் ஆண்டு முதல்வர் கருணாநிதி மற்றும் வடபாதி மங்கலம் தியாகராஜ முதலியார் போன்றோரின் முன் முயற்சியால் மீண்டும் ஓடத் தொடங்கியது.

Editor

Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *