இந்த உலகத்தில் உள்ள ஜீவ ராசிகள் அனைத்திற்கும் வெளிச்சம் தந்து வாழ வைப்பது சூரியன் தான். அவரே நவகிரங்கங்களுள் ஆண்மை கிரகமாகும். ஆண்மைக்குண்டான ஆற்றலை வழங்குபவர் இவரே.
உலகத்தின் உயிராகச் சூரியதேவன் விளங்குகிறார். உலகம் இயங்குவதற்கு மிக முக்கியமானதாக சூரியன் போற்றப்படுகிறது. வேதகாலம் முதலே சூரியனைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. ரிக்வேதம் சூரியனை மூன்றுவித அக்னியில் ஒன்றாக விவரிக்கிறது. யஜுர்வேதம் சகல உலகங்களையும் ஒளிபெறச் செய்பவன் என்று போற்றுகிறது. அதர்வண வேதம் சூரியனை வழிபட்டவர்கள் இதயநோயிலிருந்து விடுபடுவர் என்று வழிகாட்டுகிறது. எல்லா உயிர்களுக்கும் சக்தியை வழங்குவது, சூரியன் என விவரிக்கின்றன.
நவக்கிரகங்களில் ஒரு கிரகமாக, சூரியனாக, சூரிய பகவானாக வழிபட்டு வருகிறோம். சூரியனை வழிபடும் முறைக்கு செளமாரம் என்று பொருள்.
சூரியன், சிவபெருமானின் வலது கண்ணாக இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. சூரியனை சிவனோடு ஒப்பிட்டு சிவ சூரியன் என்றும், விஷ்ணுவோடு ஒப்பிட்டு சூரிய நாராயணர் என்றும் அழைக்கிறது புராணம்.
சிவபெருமானை நோக்கி கடுமையான தவம் இருந்த சூரியன், ‘கிரகபதம்’ எனும் பேறு பெற்றார். ஆயிரம் கிரகணங்களோடு ஒளி மண்டலத்தில் உலா வரும் உயர்வையும் பெற்றார் என்கிறது புராணம்.
மிகப்பழங்காலத்தில் சூரியவழிபாடு வடமாநிலங்களில் பரவி இருந்த காலத்தில் வன்முறை வழிபாடாக சூரியனுக்கு ரத்தத்தை அர்க்கியமாக (கைகளில் வார்த்து சூரியனுக்குச் சமர்ப்பித்தல்) இருந்து வந்தது தெரிகிறது.
சூரியன் மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிகளுக்கும் செல்வார். அவர் ஒருராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்லும் பொழுதுதான் மாதப்பிறப்பு நிகழ்கிறது.
சூரியன் பச்சை நிறமுடைய ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வருகிறார். இந்தக் குதிரைகள் பூட்டிய தேரை ஓட்டுபவரின் பெயர் அருணன் எனத் தெரிவிக்கிறது புராணம். இவர் திருமாலின் பெரிய திருவடி என்று போற்றப்படும் கருட பகவானின் அண்ணன் ஆவார்.
சூரியனின் புதல்வரான சனீஸ்வர மூர்த்தி தம் பெற்றோர்களுக்குப் பாத பூஜை ஆற்றும் திருநாளே ஞாயிறு, சப்தமியும் கூடும் நாள். தினமும் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பிரபஞ்சத்தை வலம் வரும் சூரியத் தேரை ஓட்டுகின்ற அருணன் ஞாயிறும் சப்தமியும் கூடும் பானுசப்தமி நாளில் அருணோதய சக்திகளைச் சூரிய சக்தித் திரவியங்களாக நிரவுகின்றார்.
சனீஸ்வர மூர்த்தி ஈஸ்வரப் பட்டம் பெற்றவுடன், சர்வேஸ்வரனை வணங்கியவுடன், தமக்கு ஆசிகள் அளித்த பெற்றோர்களான சாயா தேவி சமேத சூர்ய மூர்த்தியைச் சாஷ்டங்கமாக வீழ்ந்து வணங்கிப் பூஜிக்கின்ற திதியே பானு ஸப்தமித் திதி. துரியோதனின் பத்னியாகிய பானுமதி, பானு ஸப்தமி விரதத்தைக் கடை பிடித்து, தனரேகையை அபூர்வமாகக் கையில் கொண்டிருந்த துரியோதனனுக்கு, லக்ஷ்மி கடாட்ச சக்திகளை மேம்படுத்தித் தந்தாள்.
சூரியனின் ரதம் பொன் மயமானது என வர்ணிக்கிறது சூர்ய புராணம். அந்த ரதத்துக்கு ஐந்து ஆரங்களும் மூன்று நாபிகளும் உண்டு. மூன்று நாபிகள் என்பவை முக்காலத்தையும் குறிக்கும்.
சூரிய சக்கரத்திலுள்ள 6 கட்டைகளும், 6 ருதுக்களை குறிக்கின்றன. சக்கரத்தின் மேல் பாகமும், கீழ்பாகமும் உத்திராயனம் மற்றும் தட்சிணாயனத்தைக் குறிக்கிறது. சூரிய பகவான், தன்னுடைய தேரில் நான்கு பட்டணங்களைச் சுற்றி வந்து, காலை, மதியம், மாலை, அர்த்தராத்திரி என்ற காலங்களை உண்டாக்குகிறார்.சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் முக்கியமானது ‘ரதசப்தமி’. இதை சூரியஜெயந்தி என்று அழைக்கப்படுகிறது.
தை மாதத்தில் வரும் சப்தமியையே ரத சப்தமி என்று அழைக்கிறார்கள்.
அன்றையதினம் சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச்செல்லும். 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி பயணத்தை தொடங்குகின்றன என விளக்குகிறது புராணம். இந்த இனிய நாளில் சூரிய உதயத்தில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு.
கணவனை இழந்தவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
ரதசப்தமி விரதத்தை சூரிய உதயத்தில் செய்யவேண்டும். அதேபோல், சூரிய பகவானை தினமும் வணங்க வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால், சூரிய பகவானின் அருளைப் பெறலாம். அதேபோல், ஐப்பசி மாதம் என்பதால், துலா மாதம் என்பதால், காவிரியில் நீராடிவிட்டு, சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம்.
வீட்டு வாசலில் சூரிய ஒளிபடும் இடத்தில் சூரிய ரதம் வரைந்து, சூரிய பகவானை வேண்டிக்கொண்டால், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள்.
ஜாதக குறைபாடுகளால் சில தம்பதியருக்கு குழந்தை பேரு தள்ளிப்போகும். இதற்கு ஜாதக ரீதியில் பல காரணங்கள் உள்ளது. ஆண் பெண் என குறை யாரிடம் இருந்தாலும் இறைவனிடம் இருவரும் வேண்டுவதே சரி. அந்த வகையில் ஆண்கள் சூரியனை வணங்குவதன் மூலம் சூரியனால் ஏற்படும் பிரச்சனைகள் விலகும். குழந்தை பேறு உண்டாகும்.
சூரிய குலத்தைச் சேர்ந்த ஸ்ரீராமர், பானு ஸப்தமி நாட்களில் ஸ்ரீமன் சூரிய நாராயண விஷ்ணு ஸ்வாமிக்கான பூஜைகளைச் சூரிய மண்டலத்தில் விஸ்தாரமாக நடத்திப் பூஜிக்கின்றார். இவ்வாறு ஸ்ரீராமர் பானு ஸப்தமி நாட்களில், 108 சிவலிங்க மூர்த்திகளுக்கு பூஜைகளை நடத்தி ஸ்ரீமத்சூரிய நாராயண மூர்த்தியின் திருவருளைப் பூவுலகிற்கு பெற்றுத் தருகிறார். ஸ்ரீராமர் பானு ஸப்தமி நாளில் சிவ பூஜை ஆற்றிய தலமே கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் 108 சிவாலயம் ஆகும். இங்கு உள்ள சூரிய மூர்த்தி மிகவும் சக்தி வாய்ந்தவர். பானு சுதாகரர் என்ற நாமம் தாங்கி தினமும் 108 சிவலிங்க பூஜைகளை ஆற்றி, நவகிரகங்களுக்கு எல்லாம் அதிபதியான பேற்றைப் பெற்ற மூர்த்த வடிவுகளுள் ஒருவர். மேலும் ஸ்ரீ ராமருக்கு ராவணனுடன் ஏற்பட்ட போரில் வெற்றிபெற அகஸ்த்தியர் ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகத்தை அளித்ததும் குறிப்பிடத்தக்கது.
களத்திரதோஷம் நீக்கும் பானுஸப்தமி
பொதுவாக ஒருவருக்கு திருமணம் ஆகவில்லை எனில் களத்திர காரகன் சுக்கிரனையும் ஏழாம் பாவத்தையும்தான் கருத்தில்கொண்டு அனேகர் பார்க்கின்றனர். ஜாதகத்தில் சூரியனின் நிலையும் திருமணத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் மிகையில்லை.
ஒருவர் சிம்ம லக்னம், ராசி மற்றும் இரண்டும் சேர்ந்தோ ஜாதகத்தில் அமைய பெற்றால் அவர்களுக்கு களத்திர ஸ்தானாதிபதி சனியாக அமைவதால் எளிதில் திருமணம் நடைபெறுவதில்லை. அவ்வாறு நடைபெற்றாலும் சந்தோஷமாக அமைந்துவிடுவதில்லை. மேலும் ஒருவர் ஜாதகத்தில் சூரியனும் சுக்கிரனும் மூன்று பாகை இடைவெளியில் நின்றுவிட்டால் இருதார யோகம், ஆண்மை குறைபாடு போன்றவை ஏற்பட்டுவிடுகின்றன. அதே நேரத்தில் சூரியனும் சுக்கிரனும் 42 பாகை இடைவெளிக்கு மேல் நின்றுவிட்டால் திருமணம் என்பது 95 % நடைபெறுவது இல்லை. விதி விலக்காக நடைபெற்று விட்டாலும் பிரிய நேர்ந்துவிடுகிறது. இத்தகைய அமைப்பை பெற்றவர்கள் தங்கள் களத்திர தோஷம் நீங்கவும், இனிய திருமண வாழ்க்கை அமையவும் பானு ஸப்தமியில் சூரிய பகவானை வழிபடுவது கைமேல் பலனளிக்கும் என்பது மிகையாகாது,
பார்வையருளும் பானு ஸப்தமி
ஜோதிடத்தில் சூரியன் வலது கண்ணுக்கும் சந்திரன் இடது கண்ணுக்கும் காரக கிரகங்களாக அமைந்துள்ளனர். இரண்டாம் வீடு வலக்கண்ணையும் பன்னிரெண்டாம் வீடு இடக்கண்ணையும் குறிக்கும் பாவங்களாகும். இரண்டாம் இடத்திலும் – பன்னிரெண்டாம் இடத்திலும் பாவ கிரகங்கள் இருந்து இந்த இடத்து பலமில்லாமல் இருந்து சூரியனும் சந்திரனும் பாதிக்கபட்டு இருந்தாலும் அந்த ஜாதகனுக்கோ அல்லது ஜாதகிக்கோ கண் சம்பந்தமான குறைபாடுகள் உண்டாகும் .
சூரியன் லக்னத்தில் அமைவது கண்களை பாதிக்கும் என்கிறது மருத்துவ ஜோதிடம். சூரியன் மேஷ லக்னத்தில் உச்சம் பெற்று இருந்தால் கண்களில் எரிச்சல் ஏற்படும். மேஷம் செவ்வாயின் வீடு என்பதால் கண்களில் உஷ்ணத்தால் ஏற்படும் எரிச்சல் ஏற்படும். சூரியன் சிம்ம லக்னத்தில் ஆட்சி பெற்று இருந்தால் மாலைக்கண் நோய் ஏற்படும். சூரியன் கடகத்தில் லக்னத்தில் இருந்தால் கண்களில் பீளையும் நீரும் வடியும். மேலும் கண் புரை நோய் ஏற்படும்.
சூரியன் துலா லக்னத்தில் நீசம் பெற்றிருந்தால் பார்வையிழப்பு ஏற்படும். சூரியன் இரண்டாம் வீட்டில் நிற்பது, இரண்டாம் வீட்டில் இரண்டிற்க்கு மேற்பட்ட அசுப கிரகங்கள் நிற்பது, அசுப தொடர்பு பெற்ற சந்திரன் இரண்டாம் வீட்டில் நிற்பது போன்றவை பார்வை இழப்பை ஏற்படுத்தும். .சூரியனும் சந்திரனும் இணைந்து இரண்டாமிடத்தில் நிற்பது மாலைகண் நோயை ஏற்படுத்தும். இதுபோன்ற ஜாதக அமைப்பு உடையவர்கள் பானு சப்தமியில் சூரிய பகவானை வணங்கி வர பார்வை கோளாருகள் நீங்கும்.
தொழுநோய் போக்கும் சூரிய ஸப்தமி
கால புருஷனுக்கு ஆத்ம காரகன் என்பதாலும் உடல் முழுவதிற்க்கும் சூரியன் காரகமாவதால் தொழுநோய்க்கும் சூரியன் முதன்மை காரகம் வகிக்கிறார். மேலும் வைட்டமின் D குறைபாடும் தோல் நோயிற்க்கு காரணம் என்கின்றனர் அறிவியலார். வைட்டமின் D க்கு காரக கிரகம் சூரியனாகும். மேலும் நமக்கு தேவையான வைட்டமின் D சூரிய வெளிச்சத்திலிருந்துதான் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. சூரியன், சுக்கிரன் மற்றும் சனி எந்த ராசியிலும் இணைவு பெறுவது. சூரியனும் சந்திரனும் நீர் ராசியில் இணைந்து நின்றால் ஜாதகருக்கு உடம்பில் வெள்ளை புள்ளிகள் ஏற்படும். பானு சப்தமியில் சூரிய பகவானை வணங்கி வர தொழுநோய் நீங்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
அரசு வேலை கிடைக்க சூரியன் வழிபாடு
ஜோதிடத்தைப் பொறுத்தவரை பத்தாமிடம் இடம் உத்தியோக ஸ்தானமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பத்தாமிடத்தின் அதிபதி பத்தில் இருந்து சூரியனின் பார்வை சேர்க்கை ஏற்பட்டால் அரசு வேலை கிடைக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. மேலும் கர்மகாரகன் என கூறப்படும் சனைஸ்வரன் அரசாங்க உத்யோக காரகன் சூரியனுடன் சேர்க்கை பெற்றிருந்தால் அரசு வேலை கிடைக்கும். சில ஜாதகங்களில் செவ்வாயின் கிரக நிலையும் அரசுப் பணியை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்ததாக அமையும். செவ்வாய் பத்தாமிடம் மற்றும் சூரியன் சனி ஆகியவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தால் அவர்கள் சீருடை பணியாளர்கள் எனப்படும் காவல் துரை, தீயணைப்பு மற்றும் ராணுவத்துறை போன்றவற்றில் பணியாற்றுவார்கள். இத்தகைய அமைப்பை ஜாதகத்தில் கொண்டவர்கள் சனைச்ச்ர பகவான் தன் தந்தைக்கு பாத பூஜை செய்யும் பானு ஸப்தமி நாளில் வணங்கினால் அரசாங்க வேலை விரைவில் கிடைக்கும் என்பது நிதர்சனம்.
அரசியலில் பிரகாசிக்க சூரிய வழிபாடு:
ஒருவருடைய ஜாதகத்தில் சூரியனுடன் சனி சேர்க்கை பெற்று இருந்தால் ராஜாங்க சம்மந்தமான வேலைகள், அரசு, அரசு சார்ந்த தொழில், அரசியல், தலைமை பதவி, கெளரவபதவிகள் ஆகியவை அமைகின்றது. அரசியலுக்கும் அரசியல் பதவிகளுக்கும் காரக கிரகங்கள் சூரியன் சந்திரன் மற்றும் கால புருஷனுக்கு பத்தாம் வீட்டதிபதியான சனைஸ்வர பகவானும் ஆவர். தற்போது அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலையில் பலரும் அரசியலில் மாற்றத்தை நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் அரசியல், அதிகாரம், அந்தஸ்து, கௌரவம், உயர்பதவிகள் ஆகியவற்றை குறிக்கும் சூரியன் கால புருஷனுக்கு எட்டாம் வீடான விருச்சிகத்தில் பலமிழந்து நிற்கிறது. மேலும் ஆண்மை, வீரம், பலம், அதிகாரம் ஆகியவற்றை தரும் செவ்வாய் பகை வீடான கன்னியில் பலமிழந்து நிற்க்கின்றது. இந்நிலையில் அரசியலில் கொடிகட்டி பறக்க விரும்புபவர்கள் பானு சப்தமியில் சூரியனை வணங்க அரசியலில் அமோக வெற்றி உண்டாகும்.
பித்ரு தோஷம் போக்கும் பானு சப்தமி
பித்ருக்கள் எனப்படும் நம் முன்னோர் வசு, ருத்ர, ஆதித்யர் ஆகிய மூவரின் தொடர்புடன் இணைந்தவர்கள். ஸ்தூல வடிவத்தை விட்டு, சூட்சும வடிவில் இருப்பவர்கள். தேஜஸ் – வாயு போன்ற லேசான பஞ்சபூதங்களைத் தழுவி பரவியிருப்பவர்கள். திவ்ய பித்ருக்களைப் போல் தெய்வாம்சம் பொருந்தியவர்கள். தர்ப்பணம் வாயிலாகவும் பிண்டம் வாயிலாகவும் வழிபட வேண்டியவர்கள். பித்ருலோகம், சூரியனுக்கு அப்பால் பல லட்சம் மைல் தொலைவில் இருப்பதாக கருடபுராணம் கூறுகிறது. பித்ருக்கள் அங்கிருந்து தங்கள் குடும்பத்தினர் நலமாகவும் வளமாகவும் வாழ அருளாசி வழங்குகின்றனர். ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்களை வழிபடும் முறைக்கு பிதுர் தர்ப்பணம் அல்லது சிரார்த்தம் என்று பெயர். பானு சப்தமி தினம் கிரஹன புண்ணிய காலத்திற்கு நிகரானதாக கருதப்படுவதால் அன்றைய தினம் தர்பணங்கள் செய்வது பித்ரு தோஷங்கள் நீங்க வழிவகுக்கும்.
பானு ஸப்தமியில் சூரியனை வணங்குவோருக்கு கண் நோய்கள், இருதய நோய்கள் , மஞ்சள் காமாலை ஆகியநோய்கள் நீங்கும். ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி ஆகியன உள்ளோரும், சூரிய திசை, சூரிய புத்தியால் ஏற்படும் தோஷங்கள் நிவர்த்தியாகும். நவக்கிரக தோஷங்கள் உடையோரும் சூரிய பகவானை வழிபட்டால் நன்மை பயக்கும். சூரியன் வழிபட்டால் புகழ் கூடும். மங்களம் உண்டாகும். உடல் நலம் பெறும்.
விருட்சமான வெள்ளெருக்கு மரத்தில் சிவப்புத் துணி சாற்றி, மஞ்சள் கட்டி புதுமணத் தம்பதிகள் வழிபட்டால், சூரியகடாட்சம் நிறைந்த குழந்தைகள் பிறக்கும். சிவப்பு மலர்களால் சூரியனாரை அர்ச்சித்து கோதுமையை நிவேதித்து விரதம் மேற்கொள்வது நலம். ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் படித்தால் எதிரிகளை வெற்றி கொள்ள முடியும். எதிரிகள் நம் கட்டுக்குள் இருப்பார்கள்
பானு சப்தமியில் சென்னை வியாசர்பாடி இரவீஸ்வரர் மற்றும் கோலப்பாக்கம் அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் உள்ள சூரிய பகவானையும் மற்றும் அனைத்து சூரிய ஸ்தலங்களிலும் வணங்கிவர அரசியலில் வெற்றி, அரசாங்க வேலை மற்றும் உயர்பதவி/தலைமை பதவி கிட்டும். வருடத்திற்க்கு ஒருமுறைதான் இந்த அமைப்பு ஏற்படும் என்பதால் இதனை நன்கு பயன்படுத்திக்கொள்வது சிறப்பாகும்!
சூரிய பரிகாரங்கள்:
சூரியபகவானின் தோஷங்கள் நீங்கவும், அவரின் முழுமையான அருளாசிகளைப் பெறவும் ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை
காலை 8 மணிக்குள்ளாக தஞ்சையில் இருக்கும் சூரியனார் கோவிலுக்கு சென்று, சூரிய பகவானுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து, ஆரஞ்சு நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்து, கோயிலை 10 முறை வலம் வந்து வழிபட வேண்டும்.
இந்த பரிகாரத்தை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒருமுறையோ செய்வது சூரிய பகவானால் நன்மைகள் ஏற்பட வழிவகை செய்யும்.
சூரியனார் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய முடியாத நிலையில் இருப்பவர்கள், உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணிக்குள்ளாக சென்று, நவக்கிரக சன்னிதியில் இருக்கின்ற சூரியபகவானுக்கு செந்தாமரைப்பூ சமர்ப்பித்து, கோதுமை கொண்டு செய்யப்பட்ட உணவை நைவேத்தியம் செய்து, சூரிய பகவானுக்குரிய காயத்திரி மந்திரம்
மற்றும் ஸ்தோத்திரங்களை
108 முறை துதித்து வழிபடுவதால், சூரிய கிரக தோஷங்கள் நீங்கி, வாழ்வில் நன்மையான பலன்கள் உண்டாகும்.
இந்த பரிகாரத்தை 9 முதல் 27 வாரங்கள் வரை செய்வதால் மட்டுமே உறுதியான பலன்களை பெற முடியும்.
மேற்கூறிய இரண்டு பரிகாரத்தையும் செய்ய முடியாதவர்கள் தினந்தோறும் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, சூரியன் உதிக்கின்ற கிழக்கு திசை நோக்கி நின்றவாறு “ஓம் சூரிய நாராயண நமஹ” என்கிற மந்திரத்தை 108 துதித்து வழிபடுவதால் சூர்ய கிரக தோஷங்கள் நீங்கும்.
ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் ஒரு வேளை மட்டும் இனிப்பு உணவு அல்லது கோதுமை கொண்டு செய்யப்பட்ட உணவை சாப்பிட்டு,
சூரிய பகவானுக்கு விரதம் இருந்து, சூரிய பகவானை மந்திரங்களால் துதித்து வழிபட்டு வர சூரியனால் நன்மைகள் உண்டாகும்.
மேலும் உங்கள் சக்திக்கேற்ப ஞாயிற்றுக்கிழமைகளில் 8 மணிக்குள்ளாக ஏழைகளுக்கு கோதுமை , வெல்லம், இளஞ்சிவப்பு நிற வஸ்திரங்கள் போன்றவற்றை தானம் செய்வதும் சூரிய பகவானுடன் தோஷங்களை போக்கும் சிறந்த பரிகாரமாகும்.
சூரிய பகவான் மந்திரம்:
சீலமாய் வாழச் சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுதந்திரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்
காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்
வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனைரட்சிப்பாய் சேங்கதிரவனே போற்றி
சூரிய காயத்ரி :
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்
இந்த அற்புதமான சூரிய துதி தூயயை தினமும் காலையில் நீராடிவிட்டு கிழக்கு திசை பார்த்து நின்று சூரியனைப் பகவானை பார்த்து 10 முறை சொல்ல அனைத்து நோய்களும் தீர்ந்து உடல் மற்றும் மனோபலம் பெறலாம். அதிலும் ஞாயிறு கிழமைகளில் அதிகாலையில் குளித்த பின்னர் சொல்ல மேலும் நல்ல பலன்கள் கிடைக்கும். சூரிய மந்திரம் நம் மனதை ஒழுங்கு படுத்தி அமைதியையும், நற்சிந்தனையையும் தரும். அதே போல் சூரிய நமஸ்காரம் நம் உடலை வளப்படுத்தி, எந்த நோயிலிருந்தும் காக்கும் மிக உன்னதத்தைத் தரக் கூடியதாக இருக்கும்.
ஆரோக்கியமும் ஆனந்தமும் பெற
“ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹத் விதிகராய தீமஹி
தன்னோ சூர்யப் பிரசோதயாத்”
(உலகிற்கு ஒளியூட்டும் பாஸ்கரனே,
கோள்களையெல்லாம் கட்டுக்கோப்பாக
வைத்திருப்பவனே, சூரிய பகவனே,
எல்லா வளங்களும், பெற அருள்வாய்!)