இனிமையான இல்லற வாழ்க்கையை அருளும் வெள்ளலூர் தேனீஸ்வரர் கோவில்…!

Theneeswarar Temple

ஜாதகம் அல்லது பொருளாதார காரணங்களால் தங்கள் திருமணம் தள்ளிப்போகிறதே இனி கவலைப்பட வேண்டாம். தேனீஸ்வரரிடம் மனதார வேண்டுங்கள்.  தேன் போன்ற இனிமையான இல்லற வாழ்க்கையை உங்களுக்கு அருள்வார்.

தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு திருமண பாக்கியத்தை விரைவாக  தருபவர். தேனீஸ்வரர் திருத்தலம் கோவையை அடுத்த வெள்ளலூர் பஸ் நிலையம் அருகே உள்ளது.

சுயம்புமூர்த்தியாக அருளும் சிவன்…

இந்த திருத்தலத்தில் கருவறையில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார் தேனீஸ்வரர். இது சுயம்புமூர்த்தி ஆகும்.

காமதேனு, சூரியன் வழிபட்டு பேறு பெற்ற திருத்தலம் இது. முன்பு சோலைகள் சூழ்ந்த இந்த தலத்தில் தேனீக்கள், தேனை தேனடையில் சேமிக்காமல், சுயம்புலிங்கத்தின் மீது அபிஷேகம் செய்ததால் மூலவருக்கு தேனீஸ்வரர் என்று பெயர் வந்ததாக தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தின் முதல்நாள் அன்று காலையில் சூரியபகவான் தேனீஸ்வரரை தரிசிக்கிறார். அன்று காலை கருவறை முழுவதும் சூரியவெளிச்சத்தில் இருப்பதை அறியலாம்.

தேனீஸ்வரருக்கு இடதுப்புறத்தில் கிழக்கு நோக்கி அன்னை, சிவகாமி சுந்தரி என்ற திருநாமத்தில் எழுந்தருளி உள்ளார். தனது வலது திருக்கரத்தில் தாமரை பூவும், அபய கஸ்தமாக காட்சியளிக்கிறார்.

அருகே சங்கரநாராயணர் எழுந்தருளி உள்ளார். அவரை தரிசித்து விட்டு வெளியே பிரகாரத்தில் வரும் போது தெற்கு நோக்கி காட்சி தரும் தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம். மேலும் கோவிலில் பாலமுருகன், சண்டிகேஸ்வரர், துர்க்கையம்மன், கால பைரவர், சந்திரன், நவக்கிரக நாயகர்களை தரிசிக்கலாம்.

ஆலய அமைப்பு:

கோவில் மதில்சுவருடன் சேர்த்து 4 பிரமாண்ட தூண்கள், அதன் மேல் பெரிய ஆவுடையார். அதன் மீது சிவலிங்கம். அதை குடை போல் பாதுகாத்து சேவை சாதிப்பதில் ஐந்து தலைநாகத்திற்கு ஒரு மகிழ்ச்சி. சமய சின்னங்கள் பொறிக்கப்பட்ட லிங்கத்தின் மீது நர்த்தனம் ஆடும் நடராஜர்.

இதற்கு மேல் நான்கு புறமும் கலசங்களுடன் உள்ள சின்ன, சின்ன கோபுரத்திலும் நர்த்தன நடராஜர் வீற்றிருக்கிறார். தூரத்தில் இருந்து கோவிலுக்கு வரும் போதே இதை தரிசிக்கலாம்.

கோவிலின் முகப்பில் தோரணக்கல்லில் 2-ம் நூற்றாண்டை சேர்ந்த பராந்தகசோழன் பற்றி செய்திகள் வட்டெழுத்துக் களால் பொறிக்கப்பட்டு உள்ளது. இது கோவிலின் பழமையை எடுத்துரைக்கும்.

கோவிலுக்குள் நுழைந்தவுடன், வெளியே கல்யாண விநாயகர் சன்னிதி உள்ளது. அவரை தரிசித்து விட்டு நர்த்தன நடராஜர் வீற்றிருக்கும் நுழைவு கோபுரத்தை தரிசிக்கலாம்.

நுழைவு கோபுரத்தின் இடப்புறம் அருட்பெருஞ்ஜோதி உள்ளது. இதற்கு கீழே ஒரு சிவலிங்கம் இருக்கிறது.

அந்த சிவலிங்கத்தின் கீழே பெரிய சுரங்கப்பாதை இருந்ததாக கூறப்படு கிறது. அருட்பெருஞ்ஜோதிக்கு அருகே சூரிய பகவான் தனி சன்னிதியில் எழுந்தருளி உள்ளார்.

திருமணம் விரைவாக நடக்கும்…

இந்த தலத்துக்கு திருமண பாக்கியம் வேண்டி வரும் பெண்கள், மூலவர் தேனீஸ்வரருக்கு மாலை வாங்கி பூஜிக்க வேண்டும்.

அப்போது உடன் அவரது ஜாதக நகலையும் கொண்டு வர வேண்டும். மாலையை சிவனுக்கு அணிவித்தும், ஜாதக நகலையும் அவரது திருபாதத்தில் வைத்து சிவாச்சாரியார் பூஜை நடத்தி பின்னர், சிவனுக்கு அணிவிக்கப்பட்ட மாலையை, அந்த பெண்ணுக்கு அணிவிக்கின்றனர்.

திருமண வரம் கேட்டு வந்த பெண், பின்னர் அன்னை சிவகாமி சுந்தரியை தரிசித்து விட்டு கோவிலை வலம் வந்து அந்த மாலையுடன் வீடு திரும்புகிறார்.  வீட்டில் சாமியிடம் இருந்து தனக்கு அணிவிக்கப்பட்ட மாலையை அங்குள்ள பூஜை அறையில் பத்திரப்படுத்துகிறார்.

பின்னர் திருமணம் முடிந்த பிறகு அந்த மாலையை தனது வருங்கால கணவருடன் கோவிலுக்கு வந்து சாமிக்கு திரும்ப ஒப்படைத்து வேண்டுதல் நிறைவேறியதற்கு பூஜை செய்து நன்றி தெரிவித்து வழிபடுகின்றனர்.

இதே போல் திருமணம் வேண்டி வரும் ஆண்களுக்கு அன்னை சிவகாமி சுந்தரி கழுத்தில் கிடந்த மாலை அணிவிக்கப்படுகிறது.

சுவாமியும், அம்பாளும் தாங்கள் அணிவித்த மாலையை பெற்று கொண்ட பக்தர் களுக்கு திருமண காரியத்தை விரைந்து நடக்க ஒருவருக்கொருவர் உத்தரவிடுவதாக ஐதீகம்.

இந்த பிரார்த்தனை விரைந்து கைக்கூடுவதாக இந்த தலத்திற்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தலத்தில் 5 இலைகள் கொண்ட மந்தாரை மரத்தில் பூக்கும் இளஞ்சிவப்பு நிற பூக்களை தேனீஸ்வரருக்கு படைத்து ராகு- கேது தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறலாம்.

பழமையான திருத்தலம்

இந்த திருத்தலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வந்து திருப்பணிகள் செய்து இருக்கிறார்கள். எப்போது கோவில் தோன்றியது அது பற்றிய தகவல்கள் இல்லை. இங்குள்ள விநாயகர் சிலை 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பராந்தகசோழன் கல்வெட்டு கிடைக்க பெற்று இருப்பதும், கோவிலின் தொன்மையை காட்டுகிறது.

கடந்த 1310-ம் ஆண்டு மாலிக்கப்பூர் படையெடுப்பின் போது கோவிலில் உள்ள சில விக்கிரகங்கள் சூறையாடப்பட்டதாக என்ற வரலாற்று செய்தியும் கூறுகின்றன. கரிகாலச் சோழனும் இந்த தலத்தில் திருப்பணிகளை செய்திருக்கிறார்.

3-ம் கரிகால சோழன் காலத்தில் சிங்கத்தம்மன் என்பவர் கோவிலில் தீப வழிபாட்டுக்காக 20 களஞ்சி பொன் தானமாக வழங்கியதாகவும் வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கோவிலில் தல விருட்சமாக வன்னி மரம் விளங்குகிறது. இதுவும் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் அறிக்கை சமர்ப்பித்து உள்ளனர். உப தல விருட்சமாக மந்தார மரம் உள்ளது.

எப்படி காக்கும் கடவுள் விஷ்ணு, படைக்கும் கடவுள் பிரம்மா கண்டறிய முடியாத அடிமுடியாய் காட்சியளித்தாரே பரபிரம்மா சிவன். அது போல் தான் இந்த திருத்தலத்தின் தோற்றமும் உணர முடியாத நிலை உள்ளது.

விழாக்கள்

இந்த கோவிலில் பிரதோஷம், சங்கடஹரசதுர்த்தி, ஐப்பசி பவுர்ணமி, கார்த்திகை மாத சோமவார நாட்கள், பங்குனி உத்திரம், சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, பைரவாஷ்டமி, கிருத்திகை உள்ளிட்ட நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

எப்படி செல்ல..?

கோவை காந்திபுரம், உக்கடத்தில் இருந்து வெள்ளலூர் செல்வதற்கு டவுன் பஸ்கள் இருக்கிறது. சிங்காநல்லூரில் இருந்தும் வெள்ளலூர் செல்ல பஸ் வசதி உள்ளது

Editor

Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *