நாலாயிரத்தை மீட்டு தந்த ஸ்ரீநாதமுனிகள்

ஜ்யேஷ்டே அனுராதா ஸம்பூதம் வீரநாராயண புரேl
கஜவக்த்ராம்சம் ஆசார்யம் ஆத்யம் நாதமுனிம் பஜே |
(வீரநாராயணபுரத்தில் ஆனி மாதம் அனுஷ நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் யானை முகத்தோனின் அம்சமாக அவதரித்த முதல் ஆசாரியரான நாதமுனிகளை வணங்குகிறேன்).

ஸ்ரீ வைணவ பெரியோர்கள் (ஆசாரியர்கள் பரம்பரை) வரிசையில் முதன்மையானவரான நாதமுனிகள் கி.பி. 823-ஆம் வருடத்தில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வீரநாராயணபுரம் எனும் இன்றைய காட்டுமன்னார்கோயில் பகுதியில் அந்தணக்குடும்பம் ஒன்றில் அவதரித்தார்.

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை நமக்கு மீட்டுக்கொடுத்தவர் ஆசாரியர் ஸ்ரீநாதமுனிகள். ஸ்ரீவைஷ்ணவ ஆசாரிய பரம்பரையில் பெருமாள், மகாலட்சுமித் தாயார், விஷ்வக்சேனர் என்ற சேனைமுதலியார் ஆகிய மூவருக்கும் பிறகு, முதல் ஆசாரியராகப் போற்றப்படுபவர் நாதமுனிகளே ஆவார்.
ஒரு முறை ‌கன்னட நாட்டிலிருந்து வந்த வைணவர்கள் குருகூர்ச் சடகோபன் (நம்மாழ்வார்) பாடிய ஆயிரம் பாடல்களுள் தாமறிந்த பத்துப்பாடல்களை வீரநாராயணபுரம் பெருமாள் முன்பு பாடியது கேட்டது முதல் மொத்தப் பாடல்களையும் அறிந்து கொள்ள அவாவுற்று நம்மாழ்வார் பிறந்த ஆழ்வார்திருநகரிக்கு வந்தார். ஆயிரம் பாடல்களைத் தேடிவந்த இவருக்கு மற்ற ஆழ்வார்கள் ‌அனைவரும் பாடிய 3776 பாடல்களும் கிடைத்தது. இப்பாடல்களை நாலாயிர திவ்யப் பிரபந்தமாக நாதமுனிகள் தொகுத்தார்.

படிப்பவர்கள் இல்லாவிட்டால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நூல்கள் மறைந்துவிடும். ஆழ்வார்கள் அருளிச்செய்த பிரபந்தங்களைப் பிற்காலத்தில் பாராயணம் செய்பவர்களும், பயிற்றுவிப்பவர்களும் அரிதாயினர். எனவே, அவை மறைந்து விட்டன. அதனால், வைணவத்தின் தத்துவங்கள் சிலகாலம் வெளிப்படாமல், சிறிது மங்கி இருந்தன.

வீரநாராயணபுரம் என்னும் ஊரில் காட்டுமன்னார் என்னும் பெயரில் மகாவிஷ்ணு எழுந்தருளியுள்ளார். வைணவக் கொள்கைகள் மங்கியிருந்த அந்தக் காலத்தில், வீரநாராயணபுரத்தில் ஈஸ்வரமுனி என்னும் ஒரு விஷ்ணு பக்தர் வாழ்ந்து வந்தார். அவருக்கு மகனாக நாதமுனிகள் அவதரித்தார்.

நாதமுனிகள் சிறுவயதிலேயே சாஸ்திரங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். பின்னர் தக்க வயதில் திருமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் வடநாட்டிற்குப் புனிதயாத்திரை சென்றார்; கோவர்த்தனம் சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள்மீது அளவில்லா பக்திபூண்டு அவருக்குக் கைங்கரியம் செய்துகொண்டு அங்கேயே தங்கிவிட்டார்.

வீரநாராயணபுரத்தில் எழுந்தருளியிருக்கும் திருமால் காட்டுமன்னார், ஒருநாள் நாதமுனிகள் கனவில் தோன்றி அவரை வீரநாராயணபுரத்திற்குத் திரும்பிவருமாறு பணித்தார். திருமாலின் கட்டளைக்குப் பணிந்து, அவர் வீரநாராயணபுரம் வந்து சேர்ந்தார்.

அவர் ஒருநாள் கும்பகோணம் சாரங்கபாணிப் பெருமாளை தரிசிக்கக் கோவிலுக்குச் சென்றார். அப்போது அங்கு யாத்திரையாக வந்த வைணவ அடியார்கள் சிலர், நம்மாழ்வாரின் பிரபந்தத்திலிருந்து ஐந்தாம்பத்து-எட்டாம் திருவாய் மொழி – ‘ஆராவமுதே’ என்ற ஒரு பதிகத்தைப் பாராயணம் செய்தனர். அதைக் கேட்ட நாதமுனிகள் மிகவும் மனம் நெகிழ்ந்தார்.

அந்தப் பதிகத்தின் இறுதிப் பாசுரத்தில் ‘ஓராயிரத்துள் இப்பத்தும்’ என்று ஓர் அடி வருகிறது. இதற்கு ‘ஆயிரம் பாசுரங்களில் இந்தப் பத்துப் பாசுரங்கள் உள்ளன’ என்று பொருள். பத்துப் பாடல்களில் மனம் நெகிழ்ந்த நாதமுனிகள், மீதியுள்ள 990 பாசுரங்களையும் அறிந்துகொள்ள விரும்பி, அவற்றைப்பற்றி அந்த வைணவ அடியார்களிடம் வினவினார்.

அந்த வைணவ அடியார்கள் தங்களுக்கு இந்தப் பத்துப் பாசுரங்கள் மட்டும்தான் தெரியும் என்றும் மீதியுள்ளவை பற்றி எதுவும் தெரியாது என்றும் கூறினர். மேலும், இவைகுறித்து இன்னும்” அறிய நம்மாழ்வாரின் அவதாரத் தலமான ஆழ்வார் திருநகரி எனப்படும் திருக்குருகூர் சென்றால் மீதியுள்ள பாசுரங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம் என்றும் கூறினர்.

அவற்றை எப்படியாவது அறிந்து கொள்ள வேண்டும் என்று தீராத ஆசைகொண்ட நாதமுனிகள் திருக்குருகூர் சென்றார். பல இடங்களிலும் சுற்றி அலைந்து இறுதியாக பராங்குசதாசர் என்ற பெரியவரைச் சந்தித்தார். அவர், மதுரகவியாழ்வார் அருளிய ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ என்ற பிரபந்தத்தை நாதமுனிகளிடம் கொடுத்தார். மேலும், இப்பிரபந்த பாசுரங்களை பக்தியுடனும் ஒருமைப்பட்ட மனதுடனும் பன்னிரண்டாயிரம் முறை பாராயணம் செய்பவர்களுக்கு நம்மாழ்வாரின் தரிசனம் கிடைக்கும் என்றும் கூறினார்.

நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரியில் அவதரித்து, ஒரு புளியமரத்தின் அடியில் பதினாறு ஆண்டுகள் யோகநிலையில் இருந்தார். அந்தப் புளியமரம் ‘திருப்புளியாழ்வார்’ என்று போற்றப்படுகிறது. அந்தப் புளியமரத்தின் அடியில் நாதமுனிகள் அமர்ந்து பராங்குசதாசர் கொடுத்த பிரபந்த பாசுரங்களைப் பன்னிரண்டாயிரம் முறை பக்தியுடன் பாராயணம் செய்தார். அதன் பலனாக நம்மாழ்வாரின் தரிசனம் அவருக்குக் கிடைத்தது.

நம்மாழ்வார் தான் எழுதிய ஆயிரம் பாசுரங்களுடன், மற்ற ஆழ்வார்களின் பாசுரங்களையும் சேர்த்து தாலாயிர திவ்யப் பிரபத்தத்தை நாதமுனிகளுக்கு அருளினார்.

3776 பாடல்களையும் ஆயிரம் ஆயிரமாய்ப் பிரித்த இவர் அவற்றுள் பண்ணுடன் பாடும்படி அமைந்த இசைப்பாக்களை 3 தொகுப்புகளாகவும் அல்லாத இயற்பாக்களை தனித்தொகுப்பாகவும் பிரித்தார். பாடல்களைத் தொகுத்ததோடு மட்டுமின்றி இப்பாடல்கள் காலத்தால் அழியாது இருக்கும் பொருட்டு இப்பாடல்களை பண் மற்றும் தாளத்துடன் தனது மருமக்களுக்குக் கற்பித்தார். இவ்விருவரே மேலை அகத்து ஆழ்வான் என்றும் கீழைஅகத்து ஆழ்வான் என்னும் பெயர் பெற்றவர்கள். இவர்களின் வழி வந்தோரே இன்றைய அரையர்கள்.

இவ்வாறாக, நாலாயிர திவ்யப் பிரபந்தம் இந்த உலகிற்கு மீண்டும் கிடைத்தது. இவ்வாறு பெற்ற நாலாயிரம் பாசுரங்களுக்கும் நாதமுனிகள் இசை அமைத்தார்.
நாதமுனிகள் நியாயதத்வம், யோகரஹஸ்யம் என்ற இரண்டு நூல்களை அருளியுள்ளார். வீரநாராயணபுரத்தில் எழுந்தருளியுள்ள காட்டுமன்னாருக்குக் கைங்கரியம் செய்துவந்த அவர், இறுதியில் தன்னுடைய ஆசாரியன் திருவடிகளை அடைந்தார்.
நாதமுனிகள் தொகுத்த இத்திவ்யப் பிரபந்தமே உலகின் அனைத்து மொழி பேசும் வைணவர்களுக்கும் ஆதாரமாகவும் தினப்படி வழிபாட்டிற்கும் விளங்குகிறது.
இவர் பெரியாழ்வார், மதுரகவியாழ்வார் ஆகியோர் பாடல்களுக்குத் தனியன்கள் பாடியுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

Editor

Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *